search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை நாடாளுமன்றம்"

    நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழுவை அமைப்பது என இலங்கை அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி அதிரடியாக நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.

    ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த கோர்ட்டு சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தது.



    இதற்கிடையே கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டிலுமே ராஜபக்சே தோல்வி கண்டார்.

    இதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் கூட்டினார். இது தோல்வியில் முடிந்தது.

    இந்தநிலையில் நேற்றுமதியம் இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சபையை நடத்தினார். அப்போது ராஜபக்சே அரசு மீது மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை.

    துணை சபாநாயகர் கூறுகையில், “சபை கூடும் முன்பாக கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற அலுவல்களை அமைதியாக நடத்துவதற்கு தேர்வுக் குழு ஒன்றை அமைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்” என்றார்.

    அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி. தினேஷ் குணசேகரா, அரசாங்கம் எங்களிடம் இருப்பதால் தேர்வுக் குழுவில் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு ஜனதா விமுக்தி பெரமுனா உறுப்பினர் அனுரா குமார திசநாயகே, ராஜபக்சே தனக்கு பெரும்பான்மை இருப்பதை சபையில் நிரூபிக்கவில்லை. எனவே பெரும்பான்மை உள்ள அணியினரே தேர்வுக்குழுவில் அதிகம் இடம் பெற வேண்டு்ம் என்று வலியுறுத்தினார்.

    கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமளி, கைகலப்பு நடந்தது போல் நேற்று எதுவும் நடக்கவில்லை. 10 நிமிடங்களுக்கு பின்னர் சபையை வருகிற 23-ந்தேதிக்கு துணை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.  #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe
    இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்த பிறகுபுதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை.
     
    “அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரணில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.

    பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

    இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார்? என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன.

    இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரணில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.



    ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

    இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிபரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டவாறு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பு நகரின் முக்கிய சாலையில் பேரணியாக சென்றனர். #LankaPMsacking #RanilWickremesinghe #MaithripalaSirisena
    இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. #MaithripalaSirisena #Parliament #SriLanka
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார்.



    மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது.

    ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதிபரை அவர் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கினார்.

    இதை ஏற்க மறுத்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபரின் நடவடிக்கையால் நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் என கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதம் எழுதிய அவர், தன்னிடம் ஆலோசனை செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவது மிகப்பெரும் தவறு என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் அரசின் தலைவராக ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட கரு ஜெயசூர்யா, அவருக்கு எதிராக வேறொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த பரபரப்பான சூழலில் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேற தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக விக்ரமசிங்கேயின் ஆதரவாளரும், மந்திரியுமான அர்ஜுனா ரணதுங்காவை கொழும்பு நகரில் முற்றுகையிட்ட ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சுடப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

    இலங்கையில் நிலவும் இந்த அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவுரெட் கூறுகையில், ‘இலங்கையில் யார் தலைமையில் அரசு அமைப்பது? என்பதை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் உறுதி செய்யும் பொருட்டு, சபாநாயகருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை அதிபர் உடனடியாக கூட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    இலங்கையில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கவனிப்பதாக கூறிய நவுரெட், அங்கு வன்முறை மற்றும் அடக்குமுறையில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இதைப்போல இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும் எனவும், அனைத்து கட்சிகளும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் அரசியல் சாசன வழிமுறைகளை மதித்து சட்டத்தின் ஆட்சியையும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே நேற்று பிரதமர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் நேற்று உரையாற்றிய ரனில் விக்ரமசிங்கே, நாடாளுமன்ற விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது எனக்கூறினார். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய அவர், சபை கூடும்போது அதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகருக்கே அதிகாரம் இருப்பதாகவும், இது தொடர்பாக நாளை (இன்று) அவர் முடிவு எடுப்பார் என்றும் ரனில் விக்ரமசிங்கே கூறினார்.

    இதைப்போல இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, சிலர் இதை வெளியில் தீர்க்க முயல்வதாகவும், இது ரத்தம் சிந்தவே வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
    ×